தூத்துக்குடி,
தூத்துக்குடியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற 25 மீனவர்கள் மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி தருவைகுளத்தை சேர்ந்த சூசைபாக்கியம் என்பவரின் விசைப்படகில் 8 மீனவர்களும், மைக்கேல் ஜான்சங்கர் என்பவரது விசைப்படகில் 8 மீனவர்களும், ரமேஷ்குமார் என்பவரின் விசைப்படகில் 9 மீனவர்களும் கடந்த 1-ந் தேதி தருவைகுளத்தில் இருந்து செவுள் வலை விசைப்படகில் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு சென்றனர்.
அவர்கள் 25 பேரும் நேற்று அதிகாலையில் மாலத்தீவில் இருந்து சுமார் 150 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு ரோந்து வந்த மாலத்தீவு கடற்படையினர், 3 விசைப்படகுகளையும் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து மாலத்தீவு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி 3 படகுகளில் இருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.
பின்னர் அவர்களை மாலத்தீவுக்கு கொண்டு சென்றனர். அவர்கள் சென்ற 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை உடனடியாக மீட்பதற்கான நடவடிக்கையை மீனவர் சங்க பிரதிநிதிகளும், மத்திய- மாநில அரசு அதிகாரிகளும் செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மீனவர்கள் 25 பேர் மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.