சென்னை:
சென்னை பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நேற்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 5 மணி நேரத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வழித்தடத்தில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக, பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்-அமைச்சர் விஜய்யும் நேற்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, நேற்று மாலை 4 மணி முதல் பொதுமக்களுக்கான மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. முதல் நாளிலேயே இந்த வழித்தடத்தில் பயணம் செய்ய ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வம் காட்டினர். மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலான 5 மணி நேரத்தில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர்.
பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ ரெயில் நிலையம் முதல் வடபழனி மெட்ரோ ரெயில் நிலையம் வரை 15 கி.மீ. நீளத்துக்கு இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 11 உயர்மட்ட மெட்ரோ ரெயில் நிலையங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வழித்தடத்தில் முதல்கட்டமாக ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களின் போக்குவரத்து வசதி மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முதல் இரு திசைகளிலும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். மற்ற நேரங்களில் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை ரெயில்கள் இயக்கப்படும்.
ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.
மேலும், பூந்தமல்லி புறவழிச்சாலை மற்றும் வடபழனி ஆகிய இரு முனையங்களிலிருந்தும் கடைசி மெட்ரோ ரெயில் இரவு 9 மணிக்குப் புறப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொடக்க நாளிலேயே 5 மணி நேரத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்திருப்பது, புதிய மெட்ரோ வழித்தடத்துக்கு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள வரவேற்பை வெளிப்படுத்துகிறது.