தமிழக செய்திகள்

சேலத்தில் 28 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 28 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் சூரமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட காசக்காரனூர் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 28 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

குட்கா பறிமுதல்

சூரமங்கலம் காவல்துறையினர் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 28 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, குட்கா பொருட்களையும் அவற்றை கடத்த பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் விசாரணை

தொடர்ந்து நடத்திய விசாரணையில், குட்காவை கடத்தி வந்தவர் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே தின்னப்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னமுனுசாமி (41) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

குட்கா பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, யாருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது, இதற்கு பின்னால் செயல்படும் நபர்கள் யார் என்பதுகுறித்து சூரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.