தமிழக செய்திகள்

ஆசிரியர்களுக்கு 2-ம் கட்ட சிறப்பு தகுதித்தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

இத்தேர்வை எழுத ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்.

சென்னை,

பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு 2-ம் கட்ட சிறப்பு தகுதித்தேர்வு டிசம்பர் மாதம் 20-ந் தேதி நடக்கிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆசிரியர் தகுதித்தேர்வு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு கடந்த ஜூலை மாதம் 4 -ந் தேதி முதல் தாளும், 5-ந் தேதி 2-ம் தாளும் நடைபெற்றது. இந்த தேர்வை 2 லட்சத்து 20 ஆயிரத்து 464 ஆசிரியர்கள் எழுதினார்கள். இத்தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது.தாள்-1, தாள்-2 தேர்வுகளை எழுதிய 2 லட்சத்து 20 ஆயிரத்து 464 பேரில், 1 லட்சத்து 8 ஆயிரத்து 781 பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது 49.34 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, 50.66 சதவீதம் பேர் தோல்வி அடைந்திருந்தனர். தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு அடுத்தக்கட்டமாக தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2-ம் கட்ட தேர்வு

இந்த நிலையில் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு 2-ம் கட்ட சிறப்பு தகுதித்தேர்வு டிசம்பர் மாதம் 20-ந் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலையில் முதல் தாள் தேர்வும், பிற்பகலில் 2-ம் தாள் தேர்வும் நடைபெற உள்ளது. இத்தேர்வை எழுத ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நவம்பர் மாதம் 19-ந் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய நவம்பர் மாதம் 20-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 1-9-2025 முதல் அல்லது அதற்கு முன்னர் பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT