தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், நாலாட்டின்புதூர் சக்கரத்தாழ்வார்நகரைச் சேர்ந்தவர் முனியசாமி. வெளிநாட்டில் வேலை செய்து வரும் இவரை பார்ப்பதற்காக, அவரது மனைவி சுகாசினி தனது இரண்டு குழந்தைகளுடன் கடந்த மாதம் வெளிநாடு சென்றிருந்தார். இந்த நிலையில் பூட்டியிருந்த இவர்களது வீட்டின் கதவு கடந்த ஏப்ரல் 30-ம் தேதி உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து வந்த நாலாட்டின்புதூர் போலீசார், சுகாசினியை தொடர்பு கொண்டு விசாரித்ததில், வீட்டில் இருந்த 5 வெள்ளி காமாட்சி விளக்குகள் மற்றும் குத்துவிளக்குகள் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜகநாதன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் காளிமுத்து தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இடைச்செவல் விலக்கு அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில், அவர்கள் 3 பேரும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கைதான அம்பாசமுத்திரம் அயன்சிங்கம்பட்டி, பேச்சிமுத்து (வயது 19), மேலச்செவல் ரவி(45), கீழச்செவல் ஆறுமுகநயினார்(31) ஆகிய பேரும் முனியசாமி வீட்டின் பூட்டை உடைத்து திருடியதை ஒப்புக்கொண்டனர். இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து திருடப்பட்ட வெள்ளி விளக்குகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்த பறிமுதல் செய்தனர்.