தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரீல்ஸ் வெளியிட்ட 3 பேர் கைது

தூத்துக்குடியில் ஒரு வாலிபரின் பிறந்தநாளை முன்னிட்டு 3 பேர் சேர்ந்து யூடியூப்பைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து, அதை சமூக வலைதளங்களில் ரீல்ஸ் மற்றும் ஸ்டேட்டஸ் ஆகப் பதிவிட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

யூடியூப்பை பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு

தூத்துக்குடி லெவஞ்சிபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் (வயது 22), அமுதாநகரைச் சேர்ந்த பிரகாஷ்(23), சுடலை காலனியைச் சேர்ந்த குரு(21) ஆகிய 3 பேரும் நெருங்கிய நண்பர்கள். நேற்று முன்தினம் அலெக்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு 3 பேரும் சேர்ந்து யூடியூப்பைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் பதிவு

தயாரித்த குண்டை திறந்தவெளியில் வெடிக்கச் செய்து அதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். பின்னர் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கும் விதமாக அந்த வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

3 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவின் பேரில், தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அலெக்ஸ், பிரகாஷ், குரு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

யூடியூப்பைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து பயிற்சி எடுத்தோம். எங்கள் பகுதியில் சிலரிடம் கெத்து காட்டுவதற்காக இதைச் செய்தோம்" என கைதானவர்கள் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

போலீசார் விசாரணை

இளைஞர்களின் வீடுகளில் மேலும் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா எனப் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் வீடுகளில் வேறு வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரித்தார்களா அல்லது வேறு ஏதேனும் சதித்திட்டம் தீட்டினார்களா என்ற கோணத்தில் தென்பாகம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.