தூத்துக்குடி,
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 5 கிலோ 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொட்டகோபுரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படியான 3 நபர்களை பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அந்த 3 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதைத் தொடர்ந்து தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளான தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் மகன் பிரகாஷ் (வயது 24), திருநெல்வேலி சேரன்மகாதேவியைச் சேர்ந்த மாயாண்டி மகன் மாயகணபதி(24) மற்றும் தூத்துக்குடி குளத்தூரைச் சேர்ந்த சந்தனசேகர் மகன் முகிலரசன்(19) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 5 கிலோ 750 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்.