தமிழக செய்திகள்

5 கோவில்களில் உண்டியல்களை உடைத்து திருட்டு: 3 பேர் கைது

ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

ஆலங்குடி,

ஆலங்குடி அருகே 5 கோவில்களில் உண்டியலை உடைத்து திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மர்ம நபர்கள்

ஆலங்குடி அருகே கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில், கலிபுல்லா நகர் சித்தி விநாயகர் கோவில், ஆண்டிகுளம் மங்கள விநாயகர் கோவில் மற்றும் மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோவில், மழை மாரியம்மன் கோவில்களில் கடந்த ஒரு வாரத்திற்குள் உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

தீவிர விசாரணை

இதுகுறித்து கோவில் நிர்வாகிகள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பூசாரிகள் ஆலங்குடி மற்றும் கீரமங்கலம் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர். இதையடுத்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், கோவில்களில் உண்டியல்களை உடைத்து பணத்தை திருடியது மணமேல்குடி தாலுகா வேதியன்குடியை சேர்ந்த ஆனந்தன் மகன் காளிதாஸ் (வயது 24), தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் கலச்சங்காட்டை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நாகராஜ் (28), அறந்தாங்கி தாலுகா திருநாளூர் வடக்கை சேர்ந்த கண்ணையா மகன் விஜய் (32) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது.

கைது

இதையடுத்து தனிப்படை போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரையும் ஆலங்குடி, கீரமங்கலம் போலீசார் அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.