கொடைரோடு,
கொடைரோடு அருகே தலையை சிதைத்து தி.மு.க. பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள நாகையகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 55). தி.மு.க. பிரமுகர். இவருடைய மகன் உதயகுமார் (30). லட்சுமணனுக்கும், பக்கத்து கிராமமான மீனாட்சிபுரத்தை சேர்ந்த அஜித் (27) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கொடைரோடு அருகே கொழிஞ்சிபட்டி பகுதியில் நேற்று மதியம் லட்சுமணனின் மகன் உதயகுமார் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த 3 பேர் கொண்ட மர்மகும்பல் உதயகுமாரை வழி மறித்து தாக்க முயன்றனர். இதனால் சுதாரித்து கொண்ட அவர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் இது குறித்து தனது தந்தையிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு. அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையே நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையத்தில் இருந்த லட்சுமணன், தனது மகன் கொடுத்த தகவலை தொடர்ந்து நாகையகவுண்டன்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சில்லலபட்டி அருகே அவர் வந்தபோது, அங்கு காட்டுக்குள் பதுங்கியிருந்த அதே மர்ம கும்பல் லட்சுமணனை வழிமறித்தது. தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் பட்டா கத்தியால் லட்சுமணனை சரமாரியாக வெட்டினர்.
மேலும் அவரது தலையை சிதைத்து படுகொலை செய்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிஓடிவிட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, லட்சுமணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறு தொடர்பாக லட்சுமணனுக்கும். அஜித்துக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பேச்சு வார்த்தை நடந்துள்ளது. அதில் 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது லட்சுமணன், அவரது மகன் உதயகுமார் ஆகியோரும், அஜித் மற்றும் சிலரும் மோதிக்கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த அஜித், லட்சுமணனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி, அஜித்தின் தூண்டுதலின்பேரில் அவரது தரப்பை சேர்ந்த 3 பேர் முதலில் உதயகுமாரை கொல்ல முயற்சி செய்துள்ளனர். அது நிறைவேறாத நிலையில் லட்சுமணனை படுகொலை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக மீனாட்சிபுரத்தை சேர்ந்த பிச்சைமுத்து (30), வாசு (26), ஜல்லிப்பட்டியை சேர்ந்த கலைஞர் என்ற ரஞ்சித்குமார் (30) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.