கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த செறுதிக்கோணம் கண்டனசேரிவிளையை சேர்ந்தவர் பிரகாஷ் (33 வயது), மர வியாபாரி. இவரும் அதே பகுதியை சேர்ந்த அன்னாசி பழ வியாபாரி ஜெபின்ராஜ் என்பவரும் நண்பர்கள். ஜெபின்ராஜ் மூலம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த சேர்மதுரை (39 வயது) என்பவர் பிரகாசுக்கு அறிமுகமானார்.
அவர் தொழிலில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் அதற்கு பதிலாக இரட்டிப்பாக ரூ.10 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பிய பிரகாஷ் ரூ.5 லட்சம் பணத்துடன் நெல்லை மாவட்டம் அம்பை பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு சென்றார். அங்கு சென்று சேர்மதுரையை தொடர்பு கொண்டபோது தான் வெளியில் இருப்பதாகவும், பணத்தை விடுதியில் தங்கியிருக்கும் ராம்குமார் (40 வயது), கீர்த்தி (37 வயது) ஆகியோரிடம் கொடுக்குமாறும் தெரிவித்துள்ளார்.
அதன்படி பிரகாஷ் ரூ.5 லட்சத்தை அவர்களிடம் கொடுத்து விட்டு, இரட்டிப்பு பணத்தை கேட்டுள்ளார். அப்போது ராம்குமாரும், கீர்த்தியும் மேஜையில் இருந்து சிறிதளவு பணத்தை எடுத்துக் கொடுத்தனர். அதில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் இருப்பதாகவும், அவற்றை சாதுர்யமாக புழக்கத்தில் விட்டால் பணத்தை இரட்டிப்பாக்கி விடலாம் என்றும் கூறியுள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பிரகாஷ், கள்ளநோட்டை புழக்கத்தில் விட உடன்படாமல், தான் கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை தர மறுத்து ஏமாற்றியுள்ளனர். இதையடுத்து சேர்மதுரையை தொடர்பு கொண்டு பிரகாஷ் பேசியபோது, அவரும் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு பணம் சம்பாதிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரகாஷ், இதுகுறித்து நாகர்கோவில் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அவரது புகாரின்பேரில் சேர்மதுரை, ராம்குமார் மற்றும் கீர்த்தி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எனினும் இந்த சம்பவம் அம்பை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததால், வழக்கை அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு மாற்ற வடசேரி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.