கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற சகோதரர்கள் உட்பட 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த தங்கமணி என்பவரின் மகன்கள் இமானுவேல் (வயது 11), ஷேம் ஆபிரகாம் (வயது 9) மற்றும் இவர்களது நண்பரான ராஜா (வயது 14) ஆகிய 3 பேரும் நேற்று (ஞாயிற்றிக்கிழமை) மதியம் 3 மணியளவில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர், சின்னசேலம் – நைனார்பாளையம் சாலையில் அமைந்துள்ள தோட்டப்பாடி ஏரிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இரவு நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்தனர். சிறுவர்கள் கிடைக்காததால், இமானுவேலின் பாட்டி சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவர்களைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை தோட்டப்பாடி ஏரியின் ஆழமான பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் 3 சிறுவர்களும் சடலங்களாக மிதப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஏரியில் மூழ்கிய 3 சிறுவர்களின் உடல்களையும் மீட்டனர். இதனைத் தொடர்ந்து, உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஒரே நேரத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் சின்னசேலம் பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.