ஆட்டோ ஓட்டுநர் ஜாபர்கான் 
தமிழக செய்திகள்

பிறந்து 3 நாட்களேயான ஆண் குழந்தை ரூ. 4.5 லட்சத்திற்கு விற்பனை: ஆட்டோ ஓட்டுநர் கைது

குழந்தையை விற்ற தொகையில் பெரும் பகுதியை ஜாபர்கான் தனியாக எடுத்துக் கொண்டார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பிறந்து 3 நாட்களேயான தனது ஆண் குழந்தையை, வறுமை காரணமாக 4.5 லட்சம் ரூபாய்க்கு விற்ற தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகாரில் இடைத்தரகராக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்து, குழந்தையையும் பத்திரமாக மீட்டுள்ளனர்.

வறுமையால் நேர்ந்த அவலம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா (வயது 30). இவருக்கு, கடந்த 19-ம் தேதி பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கணவரைப் பிரிந்து வறுமையில் வாடி வந்த பாத்திமா, குழந்தையை வளர்க்க முடியாமல் தவித்துள்ளார்.

ரூ. 4.5 லட்சத்திற்கு விற்பனை

பாத்திமாவின் வறுமையை பயன்படுத்திக் கொண்ட பண்ருட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜாபர்கான் (வயது 41), குழந்தையை விற்றுவிடும்படி ஆசைவார்த்தை கூறியுள்ளார். இடைத்தரகரான ஜாபர்கான் மூலம், திருச்சியைச் சேர்ந்த ரேணுகாதேவி என்ற பெண்ணிற்கு கடந்த 22-ம் தேதி அன்று அக்குழந்தை 4.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

பணத் தகராறில் வெடித்த புகார்

குழந்தையை விற்ற தொகையில் பெரும் பகுதியை ஜாபர்கான் தனியாக எடுத்துக் கொண்டார். இதனால் பாத்திமாவிற்கு மிகக் குறைந்த தொகையே கிடைத்துள்ளது. பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த பாத்திமா, திருச்சியில் இருந்த ரேணுகாதேவியிடம் தனது குழந்தையை திரும்பக் கேட்டுள்ளார். ஆனால் அவர் குழந்தையை தர மறுத்துவிட்டார்.

போலீஸ் நடவடிக்கை- மீட்பு

வேறு வழியின்றி பாத்திமா பண்ருட்டி காவல் நிலையத்தில் கடந்த 28-ம் தேதி அன்று புகார் அளித்தார். புகாரின் பேரில் உடனடியாக செயல்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்தனர். திருச்சிக்கு விரைந்த போலீசார், ரேணுகாதேவியிடமிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு பாத்திமாவிடம் ஒப்படைத்தனர்.

ஆட்டோ ஓட்டுநர் கைது

இந்த கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனை விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் ஜாபர்கானை போலீசார் கைது செய்தனர். மேலும், குழந்தையை வாங்கிய ரேணுகாதேவி உள்ளிட்ட சிலரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT