கடலூர்,
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சண்முகாநகரை சேர்ந்தவர்கள் மனோகர்(வயது 27), ரமேஷ் (29) மற்றும் புதுச்சேரி கணபதி செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த நாகவேல் (40). இவர்கள் 3 பேரும், புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த வீரவேலுக்கு சொந்தமான பைபர் படகில், கடந்த 2-ம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.
ஆனால் இரவு வெகு நேரமாகியும் 3 பேரும் கரைக்கு திரும்பவில்லை. இதையடுத்து மாயமான 3 பேர் குறித்து பரங் கிப்பேட்டை போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாயமான 3 பேரையும், போலீசார் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகள், தீயணைப்புத்துறை அதிகாரிகள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி நடந்தது. ஆனாலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை. இதனால் மாயமான 3 பேரை நேற்று 2-வது நாளாக தீவிரமாக தேடும் பணி நடைபெற்றது. இதில் கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பலில் வீரர்கள் சென்று மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட னர். மேலும் ஹெலிகாப்டர் மூலமாகவும் தேடுதல் வேட்டை நடந்து வந்தது.
இந்த நிலையில், நடுக்கடலில் 6 நாட்களாக தத்தளித்த மீனவர்கள் 3 பேர், நீண்ட தேடுதல் வேட்டைக்குப்பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தாழங்குடாவில் இருந்து 17 கடல் மைல் தொலைவில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களை கடலோர காவல்ப்படையினர் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.