சென்னை,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் ஒன்று நேற்று வந்தது. அந்த விமானத்தில் கென்யாவைச் சேர்ந்த வென்ஜிரா பெனிசூலா (வயது 36) என்ற பெண், தனது 3 மாத பெண் குழந்தையுடன் பயணம் செய்திருந்தார்.
பிறந்ததில் இருந்தே அந்த குழந்தை இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தது. இதற்காக கென்யாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள பிரபல மருத்துவனையில் சேர்க்க கென்யாவில் இருந்து துபாய் வழியாக அழைத்து வந்தார்.
விமானம் தரை இறங்கும் போது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து விமானம் நிறுத்தப்பட்ட நடைமேடை 29-ல் உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினர் சென்று குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. விமான நிலைய போலீசார் பலியான குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.