புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே செரியலூர் ஜெமீன் பகுதியை சேர்ந்தவர் தமிழ்மாறன். இவரது மகன் விஜய் (30 வயது). இவர் எம்.எஸ்சி. முடித்து விட்டு வேலை தேடி வந்தார். இந்த நிலையில், இவருக்கு கீரமங்கலம் வடக்கு பெரியார் நகரை சேர்ந்த சரக்கு வேன் டிரைவர் பெரியசாமி என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
அப்போது அவர், தனக்கு தெரிந்த இளவரசன் என்பவர் சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனத்தில் மேலாளராக இருப்பதாக கூறி, அங்கு அதிக சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக விஜய்யிடம் ஆசை வார்த்தை கூறியதாக கூறப்படுகிறது. இதை நம்பிய விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் பல தவணைகளில் ரூ.6 லட்சத்து 85 ஆயிரத்தை இளவரசன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கொடுத்துள்ளனர்.
பணத்தை பெற்று கொண்ட இளவரசன், போலி வேலை வாய்ப்பு ஆவணத்தை விஜய்யிடம் கொடுத்துள்ளார். இதனை நம்பி சிங்கப்பூர் சென்ற விஜய், அங்கு குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும் அவர் வேறு ஒரு நிறுவனத்தில் மிக குறைந்த சம்பளத்திற்கே பணியமர்த்தப்பட்டுள்ளார். பின்னர் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் விசாரணையில் போலி ஆவணங்கள் கண்டறியப்பட்டதால், விஜய் தனது வேலையை இழந்து தாயகம் திரும்பி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழ்மாறன், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இளவரசனிடம் கொடுத்த பணத்தை திரும்பி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தமிழ்மாறன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார், பெரியசாமி (55 வயது), இளவரசன் (32 வயது) மற்றும் அவரது சகோதரர் இயலரசன் (29 வயது) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவான 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.