திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரத்தை சேர்ந்த 78 வயதான ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர் தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியுள்ளார்.
அப்போது அந்த நபர், முதியவரின் ஆதார் எண்ணை கூறி, உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து சட்டவிரோத பணம் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும், அதனால் அவரை டிஜிட்டல் கைது (Digital Arrest) செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்ப சொல்லி அந்த முதியவரை நம்ப வைத்துள்ளார்.
அதன் பேரில் அந்த முதியவர் தன்னுடைய வங்கியில் இருந்து ரூ.15 லட்சம் பணத்தை அனுப்பியதாகவும், பின்னர் மேலும் பணம் கேட்டதால் தான் ஏமாற்றம் அடைந்தது அறிந்து மோசடியாக பணம் பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தருமாறு திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் முதியவர் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் அவர்களின் உத்தரவின்பேரில், திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு மேற்சொன்ன சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளான தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த தகரம் சாய் சித்தார்த்தா (வயது 26), அவரது தந்தை தகரம் ஸ்ரீநிவாஸ்(51) மற்றும் ஹைதராபாத் பகுதியை சுரேஸ்குமார் மகன் சாய்கிரண்(36) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மேலும் சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாக புகார்களை பதிவு செய்யலாம் எனவும் இது மாதிரியான மோசடியில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் விழிப்புடன் இருக்குமாறு திருநெல்வேலி மாநரக போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.