கரூர்,
கரூர் மாவட்டம் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 55). விவசாயி மற்றும் சமூக ஆர்வலரான இவர் அந்தப் பகுதியில் உரிய காலக்கெடு முடிந்து செயல்பட்டு வந்த கல்குவாரியை எதிர்த்து போராடினார். இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி கரூர் மாவட் டம் குப்பம் பகுதியில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஜெகநாதன் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே ஜெகநாதன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும். இது திட்டமிட்ட கொலை எனவும் அவரது குடும்பத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராடினர். இதனையடுத்து போலீசார் இதனை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ஜெகநாதனை, தனது கல்குவாரிக்கு எதிராக போராடி மூட வைத்ததற்காக கல்குவாரி உரிமையாளர் கரூர் கீழ் பாகம் சிந்துநகரை சேர்ந்த செல்வக்குமார்(42) திட்டமிட்டு சரக்கு வேன் டிரைவரான சேலம் மாவட்டம் ராமாரெட்டிப்பட்டி அருகே உள்ள பாலிக்காட்டை சேர்ந்த சக்திவேல்(28), ராணிப்பேட்டை மாவட்டம் காவனூரை சேர்ந்த ரஞ்சித்குமார்(54)ஆகியோரின் மூலம் சரக்கு வேனை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கு விசாரணை கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி இளவழகன் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் கொலை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக 3 பேருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பில் கூறினார். இதையடுத்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.