திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதையடுத்து லாட்டரி சீட்டுகள் விற்கும் கும்பலை பிடிக்க திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று தனிப்படை போலீசார் திருச்சி உய்யகொண்டான் திருமலை சண்முகா நகர் 15-வது கிராஸ் பகுதியில் உள்ள தமிழரசன் (வயது 41) என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு போலியாக வெளிமாநில லாட்டரி சீட்டுகள் அச்சடித்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த தமிழரசன் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா நங்கவரம் ஆசாரி தெருவை சேர்ந்த வக்கீல் மாப்பிளை மீரான் (42), நெய்தலூர் அருகே உள்ள களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (42) என தெரியவந்தது. இதில் தமிழரசன் ஆட்டோ ஓட்டி வருகிறார். மாப்பிள்ளை மீரான் குளித்தலை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் 3 பேரும் கேரளா மாநில லாட்டரி சீட்டுகளை போலியாக அச்சடித்து திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்துள்ளதும் தனிப்படை போலீசாரின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து மடிக்கணினி, ஜெராக்ஸ் எந்திரம், செல்போன்கள் மற்றும் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 450 ரொக்கம், கலர் பிரிண்டர், வெள்ளை பேப்பர்கள், கேரள மாநில லாட்டரி சீட்டின் பெயர் கொண்ட சீட்டுகள், லாட்டரி எண், குலுக்கல் தேதி எழுதிய சீட்டுகள் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதுதொடர்பாகவும் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.