தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் உள்பட 3 பேர் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 14 சவரன் தங்க நகைகளை மீட்டனர்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சங்கரப்பேரி, ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த அருணாச்சலம் மகன் வீரமூர்த்தி (வயது 71), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆவார். இவர் கடந்த 27.9.2026 அன்று தனது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள் திருடு போனதாக சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில், வீரமூர்த்தி என்பவரது வீட்டில் தங்க நகைகள் திருடியது சென்னையைச் சேர்ந்த சதீஷ்குமார் மகன் மணிகண்டன்(30), திருச்சி, மணப்பாறை பகுதியை சேர்ந்த பொன்னன் மகன் பாலமுருகன்(29) மற்றும் புதுக்கோட்டை, இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த நல்லமுத்து மகள் சரண்யா(30) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய போலீசார் மேற்சொன்ன மணிகண்டன், பாலமுருகன் மற்றும் சரண்யா ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து திருடப்பட்ட 14 சவரன் தங்க நகைகளை மீட்டனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.