தமிழக செய்திகள்

குடும்ப வறுமை காரணமாக ரூ.1.39 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை: தம்பதி உள்பட 3 பேர் கைது

சீனிவாசன்-கவிதா தம்பதிக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருந்து வரும் நிலையில் தற்போது 4-வதாக பெண் குழந்தை பிறந்தது.

சேலம்,

சேலம் அருகே குடும்ப வறுமை காரணமாக பெண் குழந்தை ரூ.1.39 லட்சத்துக்கு விற்கப்பட்ட வழக்கில் தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெண் குழந்தை

சேலம் மாவட்டம் அரியானூர் அருகே சந்தனகாடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். தறித்தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தைகளும் உள்ளன. சீனிவாசனுக்கு சரியாக வேலை இல்லாத காரணத்தினால் வறுமையால் குடும்பத்தை நடத்த முடியாமல் கணவன்- மனைவி இருவரும் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கவிதா 4-வது முறையாக கர்ப்பம் அடைந்தார். கடந்த 19-ந்தேதி அவருக்கு அரியானூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே 3 குழந்தைகள் இருந்து வரும் நிலையில் தற்போது 4-வதாக பெண் குழந்தை பிறந்ததால் அதை எப்படி வளர்க்க முடியும்? என்று இருவரும் யோசித்தனர்.

இதைத்தொடர்ந்து கவிதா, தனக்கு 4-வதாக பிறந்த பெண் குழந்தையை, ராமநாதபுரத்தை சேர்ந்த இந்திரகுமார்-முத்துலட்சுமி தம்பதிக்கு சேலம் பெரியபுதூர் பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வரும் தங்களது உறவினரான ராமமூர்த்தி மூலம் யாருக்கும் தெரியாமல் ரூ.1.39 லட்சத்துக்கு விற்பனை செய்து உள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் சீனிவாசன்-கவிதா ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது, அவர்களுக்கு பிறந்த குழந்தையை குடும்பத்தின் வறுமை காரணமாக வளர்க்க முடியாது என்பதால் ரூ.1.39 லட்சத்துக்கு விற்பனை செய்துவிட்டதாக தெரிவித்தனர்.

3 பேர் கைது

இதையடுத்து குழந்தையை வாங்கி சென்ற அந்த தம்பதியை கொண்டலாம்பட்டி போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்தனர். பின்னர் அவர்கள் பிரச்சினை ஆகிவிட்டதால் குழந்தையை திரும்ப ஒப்படைத்து விடுவதாக தெரிவித்தனர். உடனே கொண்டலாம்பட்டி போலீசார் நேற்று ராமநாதபுரம் சென்று அங்கிருந்த குழந்தையை மீட்டு சேலத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து அந்த குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்திரகுமார்-முத்துலட்சுமி தம்பதியையும். இதற்கு உடந்தையாக இருந்த ராமமூர்த்தியையும் நேற்று இரவு போலீசார் கைது செய்தனர்.