தமிழக செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கொன்ற மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கரூர்,

கரூர் மாவட்டம் எம்.வெள்ளாளப்பட்டி கீரிக்கல் பாதையில் தங்கவேல் என்பவரது தோட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் கொப்பம்பட்டியை சேர்ந்த தொழிலாளியான சுப்புராஜ் (வயது 43) என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சுப்புராஜ் மனைவி அம்மு என்கிற அழகுலட்சுமிக்கும், கரூர் மாவட்டம் எஸ்.வெள்ளாய் ளப்பட்டி நரிக்கட்டியூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் (36) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதற்கு சுப்புராஜ் இடையூறாக இருந்துள்ளார். இதனால் அழகுலட்சுமி, கனகராஜ் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக ஜெயலலிதா (60) ஆகியோர் ஒன்று சேர்ந்து சுப்புராஜை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி இளவழகன் தீர்ப்பு வழங்கினார்.

இதில் கனகராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், அம்மு என்கிற அழகுலட்சுமி மற்றும் ஜெயலலிதாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இதனையடுத்து குற்றவாளிகள் திருச்சி மத்திய சிறை மற்றும் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.