திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரியில் 2021-ம் ஆண்டு கோவில் திருவிழாவின் போது கடை வைத்து நடத்துவதில், ஏற்பட்ட பிரச்சினையின் முன்விரோதம் காரணமாக சீவலப்பேரியை சேர்ந்த பூசாரி சிதம்பரம்(எ) துரை (வயது 41) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த சரித்திரபதிவேடு குற்றவாளிகளான தங்கப்பாண்டி(29), பேச்சுக்குட்டி(29), முருகன்(28) மற்றும் பலர் சேர்ந்து கொலை செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல்செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் (எண்-1) நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் குற்றவாளிகளான தங்கப்பாண்டி, பேச்சுக்குட்டி மற்றும் முருகன் ஆகிய 3 பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் நேற்று குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கினார்.
தண்டனை விவரம் பின்வருமாறு:
IPC 302-ன்படி ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம், IPC 506 (ii)-ன்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம், IPC 148-ன்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மூன்றாவது குற்றவாளியான முருகனுக்கு கூடுதலாக IPC 307-ன்படி 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்துள்ளார். மேலும் மேற்சொன்ன தண்டனைகளை குற்றவாளிகள் 3 பேரும் ஏக காலத்தில் (Concurrent) அனுபவிக்க நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. ரகுபதிராஜா, சீவலப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ், சீவலப்பேரி காவல்துறையினர், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் (தற்போது தென்காசி மாவட்டம்), வழக்கில் விசாரணைக்கு உதவி செய்த பெண் ஏட்டு முத்துலெட்சுமி, நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்கறிஞர் கதிரவன் ஆகிேயாரைை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.
2026-ம் ஆண்டில் இதுவரை 3 கொலை வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு 7 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் 3 சரித்திர பதிவேடு உடைய குற்றவாளிகள் உள்பட, 6 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் சென்ற ஆண்டில் (2025), 27 கொலை வழக்குகளில் 105 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டது. அதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும் 98 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் சரித்திர பதிவேடு உடையவர்கள் மட்டும் 28 நபர்கள் ஆவர்.
நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.