தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் (வயது 68) என்பவரை கடந்த 2020-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த அவரது உடன்பிறந்த சகோதரர் செந்தூரபாண்டி(77), அவரது மனைவி உத்தமி(68) மற்றும் மகன் சுரேஷ்(42) ஆகிய 3 பேரும், சொத்து பிரச்சினை காரணமாக தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜகுமார் நேற்று செந்தூரப்பாண்டி, சுரேஷ், மற்றும் உத்தமி ஆகிய 3 பேரையும் குற்றவாளி என தீர்ப்பளித்து, தலா 4 வருடம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த தூத்துக்குடி ஊரக உட்கோட்டடி.எஸ்.பி. சுதீர், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய காவல்துறையினர், அப்போதைய புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஞானராஜ், நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேது ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.