திருச்சி,
திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி குடும்பத்தோடு வரும் பக்தர்கள் இரவில் தங்கியிருந்து காலையில் அம்மனை வணங்குவதற்காக அங்குள்ள விடுதிகளில் அறை எடுத்து தங்குவது வழக்கம்.
இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பணக்கார வாலிபர்களிடம் அப்பகுதியில் சுற்றித்திரியும் சிலர் ஆசை வார்த்தை கூறி, வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக அவ்வப்போது சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. சில மாதங்களுக்கு முன்பு முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் சில வாலிபர்களை தொடர்பு கொண்ட பெண்கள், அவர்களை சமயபுரத்திற்கு வரவழைத்து அங்குள்ள பிரபலமான விடுதிகளில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது அவர்களிடம் 'உங்களை நான் திருமணம் செய்து கொள்கிறேன்' என்று ஆசை வார்த்தை கூறி, டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர்.
அதை குடித்த வாலிபர்கள் மயங்கிய நிலையில், அவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடிக்கொண்டு அந்த பெண்கள் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட வாலிபர்கள் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பெண்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சமயபுரத்தை அடுத்த பணமங்கலம் பாலம் அருகே 3 பெண்கள் சந்தேகப்படும்படி நின்றதைக் கண்ட சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தண்டாயுதபாணி, சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார், அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்த முத்துலட்சுமி (வயது 47), சந்திரா(39) மற்றும் சிவகாசியை சேர்ந்த சுந்தரிதேவி(30) என்பதும், அவர்கள் சமயபுரத்தில் உள்ள பிரபலமான விடுதிகளில் தங்கி ஆண்களை மயக்கி நகைகளை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சுமார் 7 சவரன் தங்க நகைகளை மீட்டனர். அவர்கள் 3 பேர் மீதும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில போலீஸ் நிலையங்களிலும், தமிழ்நாட்டில் உள்ள சில போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் சமயபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.