தமிழக செய்திகள்

3 வயது குழந்தை கடத்தல்: குற்றவாளியை 7 மணி நேரத்தில் பிடித்த போலீசார்...

லாரி ஓட்டுநர் லாரியை டீக்குடிப்பதற்காக நிறுத்தியபோது ஓட்டுநரின் மொபைலை வாங்கி மாயமானார்.

கள்ளக்குறிச்சி,

குழந்தையை கடத்திய நபரை 7 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

குழந்தை கடத்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கோழிக்கடை நடத்தி வரும் தம்பதியின் மகன் ரேதுசன். இவர் நேற்று மாலை 4.30 மணி அளவில் வீட்டில் இருந்து மாயமானார். இது குறித்து குழந்தையின் பெற்றோர் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது லாரி ஒன்று வந்த பின்னரே குழந்தை மாயமானது தெரியவந்தது. பின்னர், லாரியை மடக்கிப்பிடித்த போலீசார் லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அப்போது வேப்பூர் அருகே லாரியிடம் லிப்ட் கேட்டு மணிகண்டன் என்ற நபர் ஏறியுள்ளார். பின்னர், சின்னசேலம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநர் டீக்குடிப்பதற்காக லாரியை நிறுத்தியுள்ளார்.

கைது

அப்போது மணிகண்டன் போன் செய்து விட்டு தருவதாக கூறி ஓட்டுநரின் மொபைலை வாங்கி மாயமாகியுள்ளார். பின்னர், ஓட்டுநர் லாரியை அதே இடத்தில் நிறுத்திவிட்டு தூங்கினார். இதனையடுத்து ஓட்டுநரின் மொபைலை போலீசார் டிராக் செய்தனர். அப்போது சேலம் புதிய பேருந்து நிலையத்தில் மொபைலின் லொகேஷன் காட்டியுள்ளது.

பின்னர், இதனை தொடர்ந்து பேருந்து நிலையத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு, ஓசூர் செல்லும் பேருந்தில் குழந்தையுடன் அமர்ந்திருந்த மணிகண்டனை நேற்று இரவு 11.30 மணி அளவில் போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை எதற்காக கடத்தினார்? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT