தமிழக செய்திகள்

கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது: மொத்த வியாபாரிக்கு போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடியை சேர்ந்த 3 வாலிபர்கள், ஒரு கஞ்சா வியாபாரியிடம் மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து, அதை சிறுசிறு பொட்டலங்களாகப் போட்டு சுற்றுவட்டார பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கும், வாலிபர்களுக்கும் விற்று வந்துள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் தலைமையிலான போலீசார் ஸ்பிக்நகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களின் முன்னுக்குப் பின் முரணான பதில்களால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை தீவிரமாக சோதனை செய்தபோது, விற்பனைக்காக சிறுசிறு பொட்டலங்களாக மடித்து வைக்கப்பட்டிருந்த 100 கிராம் கஞ்சாவை துரிதமாக கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

சட்ட விரோத கஞ்சா விற்பனை:

காவல் துறையினரின் பிடியில் சிக்கிய வாலிபர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர்கள் முத்தையாபுரம் கிருஷ்ணாநகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் முருகன் (வயது 29), பொன்பாண்டி நகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் முத்துமணி(24) மற்றும் சிங்கர்ராஜு மகன் மணிகண்டன்(24) என்பது தெரியவந்தது. இந்த 3 பேரும் தூத்துக்குடியை சேர்ந்த ஒரு கஞ்சா மொத்த வியாபாரியிடம் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து, அதை சிறுசிறு பொட்டலங்களாகப் போட்டு சுற்றுவட்டார பகுதிகளில் கல்லூரி மாணவர்களுக்கும், வாலிபர்களுக்கும் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்துள்ளனர்.

3 வாலிபர்கள் கைது:

இதனை தொடர்ந்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், முத்துமணி, மணிகண்டன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு கஞ்சாவை மொத்தமாக விநியோகம் செய்த தூத்துக்குடி கஞ்சா மொத்த வியாபாரியை பிடிப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.