சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், தலைமையிலான பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் அடங்கிய இடைக்கால குழுவின் (Adhoc Committee) ஒத்துழைப்புடன் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் என்.பால் வசந்தகுமாரின் மேற்பார்வையில் சென்னை உயர் நீதிமன்றம், நீதி பேராண்மை மனு எண் 36085/25 ல் பிறப்பித்த உத்தரவிற்கிணங்க சென்னை, மெரினா கடற்கரையில் 300 வியாபாரிகளுக்கான கடைகள் ஒதுக்கீட்டிற்கான குலுக்கல் பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள "அம்மா மாளிகை"யில் உள்ள கூட்டரங்கில், இன்று (12.02.2026) காலை 10 மணிக்கு துவங்கி, நடைபெற்றது.
உணவுப் பொருட்கள் வகைப்பாட்டிற்கான குலுக்கலில் கலந்து கொள்ள அறிவிப்புகள் அனுப்பப்பட்டிருந்த நிலையில், வியாபாரிகள் தரப்பில் ஒரு நபர் மட்டும் பங்குகொண்டார். மாற்றுத் திறனாளிகள் ஒதுக்கீட்டில் 5 விழுக்காட்டிற்கான ஒதுக்கீட்டிற்கு, 5 மாற்றுத் திறனாளிகள் மட்டும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்திருந்ததால், அந்த 5 மாற்றுத் திறனாளிகளும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்டார்கள். தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான கடை எண்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள 95 ஒதுக்கீடுகள் பொதுப் பிரிவினருக்கான குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காத்திருப்பு பட்டியலுக்கான 10 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர், பிற்பகல் 2.00 மணிக்கு அலங்காரம் மற்றும் பரிசுப்பொருட்கள் வகைப்பாடு ஒதுக்கீட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது. வியாபாரிகள் தரப்பிலிருந்து ஒருவரும் கலந்துகொள்ளவில்லை.
மாற்றுத் திறனாளிகளுக்கான 5 விழுக்காடு ஒதுக்கீட்டில் ஒரு மாற்றுத் திறனாளி மட்டும் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து தகுதி பெற்றிருந்ததால், அந்த நபர் தேர்வு செய்யப்பட்டு, கடை எண் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டின்படி 4 கடைகளும் பொதுப்பிரிவினருக்கு சேர்த்து 99 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, காத்திருப்பு பட்டியலுக்கான 10 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு பொம்மை வகைப்பாடு ஒதுக்கீட்டிற்கான மாற்றுத் திறனாளிகளுக்கான 5 விழுக்காடு ஒதுக்கீட்டில் மூன்று மாற்றுத் திறனாளிகள் மட்டும் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து தகுதி பெற்றிருந்ததால், அந்த நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, கடை எண்கள் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள இரண்டு நபர்கள் பொதுப்பிரிவிற்கு சேர்க்கப்பட்டு, 97 நபர்கள் பொதுப்பிரிவில் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, காத்திருப்பு பட்டியலுக்கான 10 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மேற்கண்ட குலுக்கலில் ஒரே நபர் ஒன்றிற்கு மேற்பட்ட கடைகள் ஒதுக்கீடு பெற்றிருந்தால் அவர்களின் வரிசை எண்ணில் முதல் வரிசை எண் தேர்வு செய்யப்பட்டு கடை ஒதுக்கீடு செய்யப்படும். மற்றவை ரத்து செய்யப்படும். அவ்வாறு ரத்து செய்யப்பட்ட வரிசை எண்களுக்கான காலி இடத்தில் காத்திருப்போர் பட்டியலின் வரிசைஎண் படி எடுத்து பூர்த்தி செய்யப்படும். குலுக்கல் நடைமுறைகள் மாலை 5.30 மணிக்கு முடிவுற்றது.
தேர்வு செய்யப்பட்ட ஒதுக்கீடுதாரர்களின் விவரங்கள் நீதிமன்ற உத்தரவிற்கிணங்க இடைக்கால குழுவின் உத்தரவின்படி நீதியரசர் என்.பால் வசந்தகுமார்,
ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வையில் தயார் செய்து, பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு பலகை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி வலைதளத்தில் மாலை 6.00 மணியளவில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.