ஈரோடு,
ஈரோட்டில் நாளுக்கு நாள் போதைபொருட்கள் பயன்பாடு அதி கரித்து வருகிறது. இதனை தடுக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின்பேரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.
அதன்படி ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, சட்டம்-ஒழுங்கு, ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோத னையில் ஈடுபடுகின்றனர். மேலும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள போதைப்பொருட்கள் தடுப்பு படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த கலைச்செல்வன் (வயது 22) என்ப தும், விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கலைச்செல்வனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 3 ஆயிரம் போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.1 லட்சம் என்றும் மகாராஷ்டிராவில் இருந்து போதை மாத்திரைகளை கொரியர் மூலம் வாங்கி விற்பனை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.