தூத்துக்குடி,
இலங்கைக்குக் கடத்துவதற்காக மீன் ஏற்றி செல்லும் லாரியில் கடத்தி வரப்பட்ட 318 கிலோ கஞ்சாவை தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைப்பற்றி, இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து மீன் ஏற்றிச் செல்லும் கண்டெய்னர் லாரி மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு (OCIU-Organised Crime Intelligence Unit) போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் விளாத்திகுளம் காவல் உட்கோட்டம், குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியங்குளம் கிராமப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் முன்னால் வழி காட்டிச் சென்ற ஒரு கார் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த மீன் ஏற்றிச் செல்லும் கண்டெய்னர் லாரியை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 318 கிலோ கஞ்சா பாக்கெட்டுகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக காரில் வந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோஷ்வாகணராஜ் (வயது 47), மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தன்வேல்(51), யாதலா ஸ்ரீனிவாஸ் கல்யாண்(24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 318 கிலோ கஞ்சா, ஒரு கார் மற்றும் கண்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் வாகனங்களையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் மேல் நடவடிக்கைக்காக கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.