தமிழக செய்திகள்

சென்னையில் பொதுமக்களிடம் இருந்து 33.74 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு எரியூட்டி அகற்றம்

33.74 டன் பழைய பொருட்கள் கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டன.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (18.07.2026) 132 இடங்களில் இருந்து 33.74 டன் பழைய சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்தில் விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளில் இருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பெற்று அகற்றும் பணி 11.10.2025 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில், இன்று (18.07.2026) மட்டும் 132 நபர்களிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், 33.74 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது. இதற்காக 42 எண்ணிக்கையிலான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடைபெறும் இச்சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே பெருநகர சென்னை மாநகராட்சியின் “நம்ம சென்னை” செயலியில் பதிவு செய்ய வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கப்பட வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவலை அனுப்ப வேண்டும்.

இதனடிப்படையில் மாநகராட்சிப் பணியாளர்கள் பதிவு செய்த நபர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் நேரடியாகச் சென்று, பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பாதுகாப்பாகவும், அறிவியல் முறையிலும் அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள். இச்சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.