தமிழக செய்திகள்

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திருடப்பட்ட 34 ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல்

ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர் கோபிநாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்துறை சார்ந்த ஆய்வில் ஈடுபட்டார். இந்நிலையில் கடந்த மாதம் மே 16, 17 ஆகிய தேதிகளில், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் குறைவான ஊழியர்கள் இருந்த சமயத்தில் சுமார் 10 ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனதாக புகார் எழுந்தது. அந்த ஹார்டு டிஸ்க்குகளில் நிலக்கரி கொள்முதல் டெண்டர் தொடர்பான தகவல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அதிகாரிகள் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளனர். ஹார்டு டிஸ்குகள் திருடப்பட்டது தொடர்பாக மின்வாரியம் சார்பில் 8 புகார்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. மலர்விழி என்ற மின்வாரிய அதிகாரி கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இதில், மின்வாரிய ஒப்பந்த ஊழியர் கோபிநாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான கோபிநாத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர் ஹார்டு டிஸ்க்குகளை பெங்களூருவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கோபிநாத்தை பெங்களூரு அழைத்து சென்று 34 ஹார்டு டிஸ்க்குகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கோபிநாத்திடம் இருந்து ஹார்டு டிஸ்க்குகளை வாங்கிய நபரையும் சென்னைக்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.