திருநெல்வேலி,
திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் பகுதியில் வாகன சோதனையில் 3 கிலோ 450 கிராம் கஞ்சா, ஒரு கார், ஒரு பைக்கை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு நான்கு சக்கர வாகனத்தை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில், பெருமாள்புரம், ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி தினேஷ் (வயது 28), தச்சநல்லூர், சத்திரம்புதுகுளத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி மணி(எ) எஸ்டேட் மணி(44) மற்றும் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுந்தரபாண்டியன்(எ) தமிழ் சிங்கம்(25) ஆகிய 3 பேரும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் 3 கிலோ 450 கிராம் எடையுள்ள கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து 3 கிலோ 450 கிராம் எடையுள்ள கஞ்சா, ஒரு கார் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டு, பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, அந்த 3 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.