சென்னை,
தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில், 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும். இதில் மேட்டூர், பவானிசாகர், பெரி யாறு உள்ளிட்ட 15 முக்கிய அணைகளின் கொள்ளளவு மட் டும் 198 டி.எம்.சி. இந்த அணைகள் பல்வேறு மாவட்டங்களின் பாசனம், குடிநீர் தேவையை மட்டுமின்றி, தொழிற்சாலைகளின் நீர் தேவையையும் பூர்த்தி செய்கின்றன.
தற்போது 90 அணைகளிலும் சேர்த்து, 70.29 டி.எம்.சி. அதா வது 31.33 சதவீதம் நீர் மட்டுமே உள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் 36.47 டி.எம்.சி. ஈரோடு பவானிசாகரில் 6.25, கோவை பரம்பிக்குளத்தில் 3.65, சாத்தனூர் 2.12 டி.எம்.சி., பேச்சிப்பாறை 2 டி.எம்.சி., தண்ணீர் அதிகபட்சம் இருப்பு உள்ளது. அணைகளில் சேமிக்கப்பட்டுள்ள நீர், குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக திறக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 14 ஆயிரத்து 141 பாசன ஏரிகள் உள்ளன. அவற்றில் 419 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. 579 ஏரி கள் 76 முதல் 99 சதவீதம் நிரம்பியுள்ளன. 1,060 ஏரிகள் 51 சதவீதம் முதல் 75 சதவீதம் நிரம்பியுள்ளன. அதேபோல், 2 ஆயிரத்து 476 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 6 ஆயிரத்து 119 ஏரிகள் 1 முதல் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. 3 ஆயிரத்து 488 ஏரிகள் நீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.
இதில் அதிகபட்சமாக மதுரையில் 1,340 ஏரிகளில் 1,062 ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. அதேபோல், சிவகங்கையில் 1,459-ல் 523 ஏரிகளிலும், திருவண்ணாமலையில் 697-ல் 309 ஏரிகளிலும், தஞ்சாவூரில் 641-ல் 280 ஏரிகளிலும், திருவள்ளூ ரில் 578-ல் 156 ஏரிகளிலும், திண்டுக்கலில் 190-ல் 151 ஏரிகளிலும், நெல்லையில் 780-ல் 132 ஏரிகளிலும் தண்ணீர் இல்லை. இதற்கு தற்போது கடும் வெயில் கொளுத்துவதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு நீர் நிலைகளில் தண்ணீர் குறைந்து காணப்படுகிறது.
நடப்பாண்டு வடகிழக்கு பருவமழையும் எந்த அளவுக்கு பெய்யும் என்று உறுதியாக கூற முடியாது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதைப் போல, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தண்ணீர் இல்லாமல் கடுமையான அளவில் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.