சென்னை,
சென்னை கொரட்டூர் ரெயில் நிலையத்தில் 3,500 போதை மாத்திரைகள் மற்றும் 1 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த விரைவு ரெயில் மூலம் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கொரட்டூர் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கடந்த 26-ம் தேதி அன்று காலை கொரட்டூர் ரெயில் நிலையத்தில் போலீசார் மாறுவேடத்தில் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்த துரைப்பாக்கத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் அஜித்குமாரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவரது உடைமைகளைச் சோதனையிட்டதில், விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 3,500 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொரட்டூர், பாடி மற்றும் அம்பத்தூர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து இந்த போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதற்காக பிரத்யேக வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி, அதன் வழியாக ஆர்டர்கள் பெற்று விநியோகம் செய்ததும் அம்பலமாகியுள்ளது.
இதையடுத்து அஜித்குமார் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், அவரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், இந்த கடத்தல் பின்னணியில் உள்ள முக்கியக் குற்றவாளிகள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து கொரட்டூர் காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.