தமிழக செய்திகள்

தூத்துக்குடி அருகே மேய்ச்சலுக்கு சென்ற 37 ஆடுகள் திடீர் உயிரிழப்பு: விஷக்கழிவு கலந்த நீர் காரணமா?

தூத்துக்குடி அருகேயுள்ள மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த கால்நடை விவசாயி, வீராநாயக்கன்தட்டு பகுதியில் சுமார் 70 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே மேய்ச்சலுக்கு சென்ற 37 ஆடுகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தன. தேங்கி நின்ற மழைநீரில் ரசாயன விஷக்கழிவு கலந்திருந்த நிலையில், அதனைப் பருகியதால் ஆடுகள் உயிரிழந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கால்நடை விவசாயி

தூத்துக்குடி அருகே உள்ள மீளவிட்டானை சேர்ந்தவர் சுடலை. கால்நடை விவசாயியான இவர் சுமார் 300 ஆடுகளை வளர்த்து வருகிறார். காலாங்கரை பகுதியில் உள்ள விளைநிலத்தில் உரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த ஆட்டுக்கிடையில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து பராமரித்து வந்தார்.

மேய்ச்சலுக்கு சென்ற 37 ஆடுகள் உயிரிழப்பு

நேற்று காலை தூத்துக்குடி அருகேயுள்ள வீராநாயக்கன்தட்டு பகுதியில் சுமார் 70 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை காணாததால், அப்பகுதி மக்களின் உதவியுடன் தேடியபோது காட்டுப்பகுதிக்குள் ஆங்காங்கே 37 ஆடுகள் இறந்துகிடப்பது தெரியவந்தது. மேலும் ஒரு சில ஆடுகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன.

தேங்கி நின்ற மழைநீரில் ரசாயன விஷக்கழிவு

இதனிடையே வீராநாயக்கன்தட்டு பகுதியில் உள்ள குடோன் அருகே, நேற்று அதிகாலை பெய்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீர் தேங்கியிருந்தது. அதில் ரசாயன விஷக்கழிவுகள் கலந்திருந்த நிலையில், அதை மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் குடித்த காரணத்தால் தான் உயிரிழப்பு நேரிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இழப்பீடு வழங்க கோரிக்கை

ஒரே நேரத்தில் 37 ஆடுகள் வரை இறந்துள்ளதால் தனது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்த சுடலை, தனக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆடுகளுக்கு உடற்கூறாய்வு

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தூத்துக்குடி தாசில்தார் திருமணி ஸ்டாலின், கால்நடைத்துறை அதிகாரிகள் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். குடோன் அருகே தேங்கி நின்ற தண்ணீரின் மாதிரிகளை சேகரித்த அதிகாரிகள், அதனை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் திடீரென இறந்த 37 ஆடுகளுக்கும் சம்பவ இடத்திலேயே உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது.

SCROLL FOR NEXT