தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் 371 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; ரூ.16,200 அபராதம்

பொதுமக்கள், வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து, மாநகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி 'பிளாஸ்டிக் இல்லா தூத்துக்குடியை' உருவாக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா கூறியுள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 371 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடைகள், வணிக நிறுவனங்களில் தீவிர சோதனை

மாநகராட்சி கமிஷனர் உத்தரவின்படி, பொது சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் 4 மண்டலங்களிலும் தனித்தனி சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு நாள்தோறும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

371 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; ரூ.16,200 அபராதம்

இதன்படி கடந்த அக்டோபர் மாதத்தில் (1.10.2026 முதல் 31.10.2026 வரை) மட்டும் மொத்தம் 104 வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் 371 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள், பிளாஸ்டிக் தேநீர் கோப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் இலைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, விதிகளை மீறிய உரிமையாளர்களுக்கு ரூ.16,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மண்டல வாரியாக பறிமுதல் விவரம்

வடக்கு மண்டலம்: 20 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு 109 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது; ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கிழக்கு மண்டலம்: 39 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு 167 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது; ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேற்கு மண்டலம்: 31 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு 77 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது; ரூ.6,200 அபராதம் விதிக்கப்பட்டது.

தெற்கு மண்டலம்: 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, 18 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது; ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் இல்லா தூத்துக்குடி

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைத் தொடர்ந்து விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் மீது மேலும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து, மாநகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி 'பிளாஸ்டிக் இல்லா தூத்துக்குடியை' உருவாக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT