தமிழக செய்திகள்

மசினகுடி வனப்பகுதியில் 3-வது காட்டு யானை உயிரிழப்பு: வனத்துறையினர் ஆய்வு

காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் மசினகுடி வனச்சரகம் அவரல்லா காப்புக்காடு மாவனல்லா குரும்பர் பள்ளம் பகுதியில் நேற்று காலை வன ஊழியர்கள் ரோந்து பணி மேற்கொண்டனர்.

காட்டு யானை

அப்போது ஆண் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதை கண்டனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நீலகிரி வன பாதுகாவலரும், புலிகள் காப்பக கள இயக்குனருமான கிருபாகரன் உத்தரவின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் காட்டு யானையின் இறப்பு குறித்து ஆய்வு செய்தனர். அப்போது வயது மூப்பின் காரணமாக ஆண் காட்டு யானை உயிரிழந்தது தெரியவந்தது.

தொடர்ந்து காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முக்கிய உடற்பாகங்கள் ஆய்வக பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டது.

கடந்த 17-ந் தேதி நீலகிரி கிழக்கு சரிவு வனப்பகுதியில் யானை குட்டி ஒன்றும், 18-ந் தேதி சிங்காரா சரகத்தில் பொக்காபுரம் பகுதியில் காட்டு யானை ஒன்றும் உயிரிழந்திருந்தது. தற்போது 3-வது யானை உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT