திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் காவல் துறையினர் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கே சந்தேகப்படும்படி வந்த மேலப்பாளையம், குறிச்சி 2வது தெருவை சேர்ந்த பேச்சுமுத்து மகன் முத்துராம் (வயது 19), அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் பாலசுப்பிரமணியன்(19), ஆண்டவர் 1வது தெருவை சேர்ந்த லட்சுமணன் மகன் மாலை(19) மற்றும் சிறார் ஒருவர் ஆகியோரை நிறுத்தி போலீசார் சோதனை செய்ய முயன்றனர்.
அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசியவர்கள், தீடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி காவல்துறையினரை மிரட்டி, அவதூறு வார்த்தைகளால் பேசி, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தும், பொதுமக்கள் மற்றும் காவல் துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனையடுத்து இளஞ்சிறார் உள்பட 4 பேரை கைது செய்து, அரிவாளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.