கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 10 ஆண்டுகளில் ரூ.17.15 கோடி நிதி மோசடி செய்ததாக முன்னாள் செயலாளர் உட்பட 4 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புறநகர்ப் பகுதியான ஊட்டுவாழ்மடத்தில் கடந்த 1960-ம் ஆண்டு முதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சுமார் 7,000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்த சங்கத்தில், 2014-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலக்கட்டத்தில் விவசாயக் கடன், பயிர்க்கடன் மற்றும் சுய உதவிக்குழு கடன்கள் வழங்கியதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது.
இந்த சங்கத்தில் தங்கள் சேமிப்புப் பணத்தை வைப்புநிதியாக செலுத்தியிருந்த பொதுமக்கள், முதிர்வுத் தொகையை திரும்பப் பெற முடியாமல் தவித்து வந்தனர். மேலும், தமிழக அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி சலுகைகளும் தகுதியான பல விவசாயிகளுக்கு சென்றடையவில்லை என புகார்கள் எழுந்தன. இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பர்ணபாஸ் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து சங்கத்தின் வரவு செலவு ஆவணங்களைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில், கடந்த 2014 முதல் 2024 வரை போலியான ஆவணங்கள் மற்றும் கணக்குத் திருத்தங்கள் மூலம் சுமார் ரூ.17.15 கோடி அளவுக்கு பணம் மோசடி செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த நிதி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் செயலாளர் தேவசாம் பால்ராஜ் (வயது 64), உதவிச் செயலாளர்கள் நடராஜ் (வயது 63), பூதலிங்கம்பிள்ளை (வயது 63) மற்றும் எழுத்தர் விஜயகுமாரி (வயது 68) ஆகிய 4 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்பது மற்றும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.