சேலம்,
சேலம் மாவட்டம் தாரமங்கலம், ஓமலூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சில வாலிபர்கள் போதை ஊசி மற்றும் மாத்திரைகளை பயன்படுத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தாரமங்கலத்தில் போதை மாத்திரை மற்றும் ஊசி விற்பனையில் ஈடுபட்டதாக சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (24) என்பவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அவரிடமிருந்து 39 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் ஸ்ரீகாந்தை தாரமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் நடத்திய விசாரணையில், மல்லூர் ஏர்வாடியை சேர்ந்த ஜீவா (24), வீரபாண்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (28), சேலத்தை சேர்ந்த சுப்பிரமணி (58) ஆகியோரும் போதை ஊசி மற்றும் மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ரீகாந்த் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுப்பிரமணி மருந்து பிரதிநிதியாக பணிபுரிந்து வந்ததும், மொத்தமாக வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி, போதைக்காக வாலிபர்களிடம் விற்பனை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த போதை மாத்திரை மற்றும் ஊசி விற்பனைக்கு வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.