சென்னை,
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க ஹிந்துஸ்தான் எண்ணெய் நிறுவனம் தமிழக அரசிடம் அனுமதி கோரியிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்காமல், ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை பகுதியில் உள்ள நிலப்பரப்பில் ஓஎன்ஜிசி நிறுவனம் பல்வேறு இடங்களில் எண்ணெய் கிணறுகள் அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக செய்திகள் வருகின்றன. இந்நிலையில் கடலுக்குள் 18 கிமீ தொலைவில் ரூ.425 கோடி மதிப்பீட்டில் 4 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க கடலோர ஒழுங்கு முறை ஆணையத் தின் அனுமதி கோரி இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதன்மூலம் கடல் வளம் மற்றும் மீனவர்களின் நலன் கேள்விக்குறியாகிவிடும்.
கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே நெய்வேலியில் அமைக்கப்பட்டுள்ள என்.எல்.சி நிறுவனம் மற்றும் சிப்காட் தொழிற்சாலை போன்றவைகளால் இங்குள்ள சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக ஹைட்ரோ கார்பன் கிணறுகள் கடலில் அமைக்கப்பட்டால் இது மேலும் கடுமையான சுற்றுச்சூழல் விளைவுகளை இப்பகுதியில் ஏற்படுத்தக்கூடும்.
தற்போது உலகளவில் அச்சுறுத்தலாக இருக்கும் காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் ஆகிய காரணிகளால் கடலோர சூழல், கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்புகள் ஏற்படும் எனவும், எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்காகக் கடலின் அடிப்பகுதியை தோண்டும் போது, அங்குள்ள கடல் புற்கள் மற்றும் பவளப் பாறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் எனவும் சுற்றுச்சூழல்ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சுற்றுச்சூழலையும், கடல் வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் அழிக்கும் இது போன்ற எந்தவித திட்டங்களையும் மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.