தூத்துக்குடி,
தூத்துக்குடி- திருச்செந்தூர் பிரதான சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், 4 கிலோ கஞ்சாவுடன் வலம் வந்த கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிவப்பிரசாத் உத்தரவின்பேரில், டவுன் டி.எஸ்.பி. சுனில் ஆலோசனையின்படி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி- திருச்செந்தூர் பிரதான சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கையில் வைத்திருந்த பையில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
உடனடியாக அவரை தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் தூத்துக்குடி எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் கபில்தேவ் (வயது 25) என்பது தெரியவந்தது. இவர் தற்போது மூன்று சென்ட் அந்தோணியார்புரத்தில் வசித்து வருகிறார்.
மேலும், இவர் மீது கொலை மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து விடுதலையான ரவுடி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் வழக்குப்பதிவு செய்து கபில்தேவை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.