4 பேர் கைது 
தமிழக செய்திகள்

ஆவடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 வழிப்பறி: 4 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்களில் பாலாஜி என்பவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 இடங்களில் கத்தியைக் காட்டி வழிப்பறி மற்றும் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட பயங்கரக் கும்பலை ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

அதிகாலையில் தொடங்கிய வேட்டை

திருவள்ளூர் மாவட்டம் வீரபுரம் மோரை முருகன் கோவில் தெருவில் கடந்த மாதம் 30-ம் தேதி அன்று அதிகாலை, ஒடிசா மாநிலத் தொழிலாளி ஒருவர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அந்த தொழிலாளியைத் தாக்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து, அதே நாள் காலை மோரை 400 அடி வெளிவட்டச் சாலை சர்வீஸ் லேனில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த ஒருவரை கத்தியால் குத்தி, அவரிடமிருந்த செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

தொடர்ந்த கத்திக்குத்து துணிகரம்

இத்துடன் நிறுத்தாமல், பட்டாபிராம் அருகே கருணாகரச்சேரி ஆற்றுப் பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை வழிமறித்து கத்தியால் குத்தி, அவரிடமிருந்த 1 சவரன் தங்க மோதிரத்தைப் பறித்துள்ளனர். பின்னர், கோளப்பஞ்சேரி பஜனை கோவில் பின்புறம் உள்ள வாடகை வீட்டில் புகுந்து, அங்கிருந்த ஒரு கார் மற்றும் பைக்கையும் திருடிக்கொண்டு இந்த கும்பல் தப்பியுள்ளது.

7 தனிப்படைகள் அமைத்து வேட்டை

ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இந்த தொடர் குற்றச்சம்பவங்களால் ஆவடி சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் பயமும் ஏற்பட்டது. இதையடுத்து, குற்றவாளிகளை உடனடியாகப் பிடிக்க ஆவடி காவல் ஆணையரக உத்தரவின் பேரில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர், அதில், இக்குற்றங்களில் ஈடுபட்டது கொல்லுமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 19), பாலாஜி (வயது 20), கார்த்திகேயன் (வயது 19) மற்றும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தீபக் (வயது 26) என்பது தெரியவந்தது.

கைது- பறிமுதல்

இதையடுத்து போலீசார் 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட 2 பைக்குகள், திருடப்பட்ட ஒரு கார் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் பாலாஜி என்பவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT