சென்னை,
சென்னை குரோம்பேட்டை அருகே திருநீர்மலை ஏரியில் குளித்த 2 சிறுவர்கள், 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 4 பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தனர். பின்னர், அவர்கள் அருகில் உள்ள திருநீர்மலை பெரிய ஏரிக்கு விளையாட சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை தேடினர். இதற்கிடையே, இன்று காலை ஏரி பகுதியில் 4 பேரின் உடல்கள் நீரில் மிதந்த நிலையில் இருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து குரோம்பேட்டை காவல் நிலைய போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 4 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், உயிரிழந்தவர்கள் குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த யுவனேஷ் (10), தேவதர்ஷன் (12), பூஜா (13) மற்றும் குஷி (13) என்பது தெரியவந்தது. இதில், யுவனேஷ் 6ம் வகுப்பும், தேவதர்ஷன் 7ம் வகுப்பும், பூஜா மற்றும் குஷி ஆகியோர் 8ம் வகுப்பும் படித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பள்ளி விடுமுறை நாளான நேற்று 4 பேரும் ஏரியில் குளித்த போது, சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே பகுதியில் வசித்து வந்த 4 பள்ளி மாணவ-மாணவிகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குரோம்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.