தமிழக செய்திகள்

ஒரே பைக்கில் 4 பள்ளி மாணவர்கள் பயணம்- வீடியோ வைரல்...

மாணவர்களின் செயலுக்கு சமூக வலைதள நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சென்னை,

கோவை மாவட்டத்தில் ஒரே பைக்கில் 4 பள்ளி மாணவர்கள் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

ஒரே பைக்கில் 4 பேர் பயணம்

கோவையில் அமைந்துள்ள நேரு வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள், பள்ளி சீருடையில் சாகசம் என்ற பெயரில் ஒரே பைக்கில் ஏறி பயணம் செய்தனர். மேலும் நகரின் மிக முக்கியமான காந்தி பார்க் சாலையில் தங்களது வாகனத்தை ஓட்டிச் சென்றனர்.

வீடியோ வைரல்

இதையடுத்து மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் ஆர்.எஸ்.புரம் பகுதி டி.பி வணிகச் சாலையில் மிகவும் ஆபத்தான முறையில் பைக்கை வளைத்து வளைத்து ஓட்டினர். இதனால் பக்கத்தில் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து வந்த பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

மாணவர்களின் பைக்கின் பின்னால் வந்த கார் ஓட்டுநர் தனது செல்போனில் அந்த மாணவர்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். பதிவிட்ட சில நிமிடங்களில் அந்த வீடியோ வைரலானது.

நெட்டிசன்களின் எதிர்ப்பு

இதனைத் தொடர்ந்து வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் மாணவர்களின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சில நெட்டிசன்கள் மாணவர்களின் பெற்றோரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் இதுபோன்று இருசக்கர வாகனங்களை இயக்கினால் அல்லது விபத்துகள் ஏற்பட்டால் பெற்றோர்களுக்கு கடும் அபராதம் மற்றும் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக போலீசார் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.