தமிழக செய்திகள்

கடையில் பெண்ணிடம் 4½ சவரன் நகை பறிப்பு: வாலிபர் கைது; 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு

ஆத்தூர் பஜாரில் உள்ள கடையில் இருந்த பெண்ணிடம், அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் 4½ சவரன் தங்கச் செயின் மற்றும் தாலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பஜாரில் கடையில் இருந்த பெண்ணிடம் 4½ சவரன் தங்கச் செயின் மற்றும் தாலியைப் பறித்துச் சென்ற வழக்கில், நகையை விற்பனை செய்ய உதவிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

4½ சவரன் நகை பறிப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு ஆத்தூர் பஜாரில் குமரவேல் என்பவர் கடை நடத்தி வருகிறார். கடந்த 25.9.2026 அன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில், குமரவேலின் மனைவி பத்மா கடையில் இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள், பத்மா அணிந்திருந்த 4½ சவரன் தங்க செயின் மற்றும் தாலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

56 கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி, தலைமைக் காவலர்கள் பென் ஜான்சன் மற்றும் பேச்சி ஆனந்த் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் சம்பவம் நடந்த பகுதியிலும், அதன் சுற்றியுள்ள வழிகளிலும் இருந்த சுமார் 56 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை விரிவாக ஆய்வு செய்தனர்.

தலைக்கவசம் அணிந்திருந்ததால் குற்றவாளிகளின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், சவலப்பேரி பூலுடையார் சாஸ்தா கோவில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, குற்றவாளிகள் தலைக்கவசத்தை அகற்றியது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது.

வாலிபர் கைது; 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு

விசாரணையைத் தொடர்ந்து, கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளை விற்பனை செய்ய உதவியாக இருந்த சாயர்புரம் ஏற்காடு தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் ஜான் பென்னி என்பவரை போலீசார் கைது செய்தனர். கைதான அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் நகையைப் பறித்துச் சென்ற தலைமறைவாக உள்ள மீதமுள்ள 4 குற்றவாளிகளையும் போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT