தமிழக செய்திகள்

அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் குளிக்கும் போது 4 இளைஞர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சியில் மேல் தலையூற்று அருவி உள்ளது. பரப்பலாறு அணை நீர் வெளியேறி தலையூற்று அருவியாக மாறி இங்கு தண்ணீர் கொட்டுகிறது. அருவியையொட்டி சுழல், புதைகுழி உள்ளன. இதில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். இதனால் அருவியில் குளிக்க தடை உள்ளது. கோடையிலும் தண்ணீர் வருவதால் தடையை மீறி பலர் குளிக்க செல்கின்றனர்.

அந்த வகையில், கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 11 நண்பர்கள் நேற்று மாலை ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அப்போது ஆதில், சதாம் உசேன், ஆயாஸ் மற்றும் பயாஸ் ஆகிய 4 இளைஞர்கள் அருவியில் குளிக்கும் போது நீரில் மூழ்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் இளைஞர்களின் உடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

முதற்கட்டமாக 3 இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான மற்ற ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையே, உயிரிழந்த இளைஞர்கள் அருவிக்குச் செல்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு தங்களது செல்போனில் எடுத்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.