தர்மபுரி,
புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசையையொட்டி, தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரே நாளில் 40 டன் காய்கறி மற்றும் பழங்கள் படுஜோராக விற்பனையானது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.18,50,000 ஆகும்.
புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை நாட்களில் பெரும்பாலான பொது மக்கள் விரதம் இருந்து சாமிக்கு படையலிட்டு வழிபடுவது வழக்கம். அதேபோல், புரட்டாசி மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வீடுகளில் படையல் இடுவார்கள். இதனால் இந்த நாட்களில் காய்கறிகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, புரட்டாசி 4-வது சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசையையொட்டி தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று காய்கறிகள் விற்பனை மிக தீவிரமாக நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான விவசாயிகளும், பொதுமக்களும் உழவர் சந்தையில் குவிந்தனர்.
நேற்று ஒரே நாளில் மட்டும் அக்ரோ மற்றும் நாட்டு காய்கறிகள் என மொத்தம் 37 டன் காய்கறிகளும், 3 டன் பழங்களும் என மொத்தம் 40 டன் விளை பொருட்கள் விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு ரூ.18,50,000 ஆகும்
நேற்றைய சந்தை நிலவரப்படி, 127 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை நேரடியாக விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பொதுமக்களும் உழவர் சந்தைக்கு அதிக அளவில் திரண்டு வந்தனர். சுமார் 8,050 பேர் காய்கறி மற்றும் பழங்களை வாங்கி சென்றனர்.
வழக்கமாக தர்மபுரி உழவர் சந்தைக்கு நாளொன்றுக்கு 20 முதல் 25 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால், நேற்று விசேஷ நாட்கள் என்பதால் கூடுதலாக காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அடுத்த வாரம் புரட்டாசி மாதத்தின் 5-வது சனிக்கிழமை வருகிறது. எனவே, பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் காய்கறிகளை தடையின்றி விற்பனைக்கு கொண்டு வர தேவையான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது.