சென்னை
சென்னையில் வாலாஜா பெரிய மசூதி 200 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது. இந்த மசூதியில், புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் முஸ்லிம்களுக்கு இந்து தொழிலதிபர்கள் உணவு வழங்கும் பாரம்பரியம் 40 ஆண்டுகளாக தொடர்கிறது.
இன்றைய பாகிஸ்தானில் இருந்து வந்த சிந்தி இன மக்கள் இந்து மத நம்பிக்கை கொண்டவர்கள். சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொழிலதிபர்களாக உள்ள இவர்கள் ரமலான் மாதத்தில் தினமும் தவறாமல், மசூதிக்கு 40 முதல் 50 வாளிகளை கொண்டு வருகின்றனர். மாலை நேரத்தில் நோன்பு முடிக்கும் ஆயிரம் முதல் 1,100 பேருக்கு 7 வகையான சைவ உணவுகளை வழங்குகின்றனர்.
அவற்றில் வெஜிடபுள் பிரியாணி, கலவை சாதம், குங்குமப்பூ கலந்த பால், புதிய பழங்கள் மற்றும் பேரீச்சை ஆகியவை சுபிதார் கோவிலில் வைத்து காலை 7.30 மணி முதல் தயாரிக்கப்பட்டு மாலையில் இந்த மசூதிக்கு கொண்டு வரப்பட்டு வழங்கப்படுகின்றன.
இதுபற்றி சுபிதார் அறக்கட்டளையின் மூத்த சேவையாளர் அசோக் கூப்சந்தனி கூறும்போது, மத நல்லிணக்கத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகவும், மற்ற மதத்தினருக்கு மதிப்பளிக்கும் வகையிலும், உணவு வழங்கும்போது அனைத்து தொழிலதிபர்களும் தலையில் தொப்பி அணிந்து கொள்வார்கள். மசூதியை நிர்வகிக்கும் ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, சுபிதார் அறக்கட்டளை தயாரிக்கும் எந்த உணவும் மசூதிக்குள் அனுமதிக்கப்படும் என கூறியுள்ளார்.
இதற்காக நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என அசோக் கூறினார். சுபிதார் கோவிலின் சுவர்களில் சுபி சாமியார்கள், இந்து கடவுள்கள், இயேசு கிறிஸ்து மற்றும் சீக்கிய குருக்கள் என பல்வேறு மதங்களை சார்ந்தவர்களின் புகைப்படங்கள் காணப்படுகின்றன.