தமிழக செய்திகள்

தேனியில் 400 ஆண்டுகள் பழமையான் 4 நடுகற்கள் கண்டுபிடிப்பு

தமிழகத் தொல்லியலில் துப்பாக்கி ஏந்திய வீரர்களின் நடுகற்கள் மிக அரிது.

தேனி,

சின்னமனூர் அருகே வேப்பம்பட்டியில் அரிய துப்பாக்கி வீரன் உள்பட 4 நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நடுகற்கள்

சின்னமனூர் அருகே வேப்பம்பட்டி பகுதியில், தொல்லியல் ஆய்வாளரும், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியருமான செல்வம், பழமையான நடுகற்கள் தொடர்பாக கள ஆய்வு செய்தார். அப்போது அப்பகுதியில் 4 அரிய நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் செல்வம் கூறியதாவது:-

வேப்பம்பட்டியை சேர்ந்த ஆசிரியர் ராமமூர்த்தி அளித்த தகவலின் அடிப்படையில் இந்த கள ஆய்வு நடத்தப்பட்டது. வேப்பம்பட்டி சீப்பாலக்கோட்டைச் சாலையில் 500 மீட்டர் இடைவெளியில் 2 வெவ்வேறு இடங்களில் இந்த வரலாற்றுச் சின்னங்கள் அமையப்பெற்றுள்ளன. ஸ்ரீரெங்கன் குளக்கரையில், முதன்மைப் படைத்தலைவன் சிற்பம் உள்ளது. 3 அடி உயரமுள்ள அது கி.பி. 16-ம் நூற்றாண்டை சேர்ந்தது. அதில், வீரன் தனது வலது கையில் நீண்ட வாளையும், இடது தோளில் இருந்து தொங்கும் வில்லை இடது கையாலும் ஒருசேரப் பற்றியது போல் இது உள்ளது.

துப்பாக்கி வீரன்

நடராஜ் என்பவருடைய வீட்டின் அருகில் 6 அடி ஆழத்தில் புதைந்திருந்து கண்கெடுக்கப்பட்ட மற்றொரு சிற்பம் 2 அடி உயரம் கொண்டது. அது 16, 17-ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு வாள் வீரனின் நடுகல். வலது கையில் ஓங்கிய வாளுடனும், இடது தோளில் தொங்கும் வில்லுடனும், மற்றொரு கையை இடுப்பில் ஊன்றியவாறும் போர்க்கோலத்தில் அமைந்துள்ளது. அதே பகுதியில், அரிய திணிப்பு துப்பாக்கி வீரனின் நடுகல் கண்டறியப்பட்டது. அது 17 அல்லது 18-ம் நூற்றாண்டை சேர்ந்தது. 2 அடி உயரமுள்ள அந்த நடுகல்லில், வீரன் தனது இடது கையில் நீண்ட திணிப்புத் துப்பாக்கியை தலைகீழாகத் தரையில் ஊன்றிப் பிடித்துள்ளான். வலது கையில் கூரிய உடைவாள் கீழ்நோக்கிப் பாயும் நிலையில் உள்ளது. தமிழகத் தொல்லியலில் துப்பாக்கி ஏந்திய வீரர்களின் நடுகற்கள் மிக அரிது என்பதால், இது ஆயுதப் பரிணாமத்தின் முதன்மைச் சான்றாகக் கருதப்படுகிறது. இந்த இரு நடுகற்களையும் உள்ளூர் மக்கள் 'கோட்டை கருப்பன்', 'கொத்தால முத்து' ஆகிய சிறுதெய்வப் பெயர்களில் வழிபாட்டில் வைத்துள்ளனர். அதே பகுதியில் கிடைமட்ட நடுகற்பலகை ஒன்றும் உள்ளது.

வரலாற்று உண்மைகள்

இந்த நடுகற்கள் தென் தமிழகத்தின் 400 ஆண்டுகால ராணுவ மற்றும் சமூக வரலாற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன. 500 மீட்டர் இடைவெளியில் இவை பரவியிருப்பதால், இங்கு ஒரு பிரம்மாண்டமான பாளையக் கோட்டை அரணும் காவற்சாவடியும் இருந்திருக்க வேண்டும். இப்பகுதியில் தொல்லியல் துறை முறையான அகழாய்வு மற்றும் பாதுகாக்கப்பட்ட வரலாற்று மண்டலம் சார்ந்த களஆய்வுகளை மேற்கொண்டால் மேலும் பல வரலாற்று உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளன.